உடனடிச்செய்திகள்

அமைப்பு நோக்கங்கள்

ஆரியப் பார்ப்பனியத்தின் அரச வடிவமான இந்தியத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு பின் வரும் நோக்கங்களை நிறைவேற்றவதாக இருக்கும்.


1. தொழில் துறையில் அரசுத் துறையை ஓங்கச் செய்தல், தனியார் துறையை ஒழுங்கமைத்தல், இந்தியப் பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு ஏகபோகங்களின் ஆதிக்கத்தை நீக்குதல், தமிழ்த் தேசிய முதலாளிகளுக்குச் சந்தை வசதி செய்து கொடுத்தல் ஆகிய கடமைகளை இக்குடியரசு நிறைவேற்றும். 

2. வேளாண்மையை இலாபகரமான பணியாக ஆக்குவதற்குச் சந்தை பாதுகாப்பு, இலாப விலை, நேரடி வருமான வாய்ப்பு போன்ற வகைகளில் முயலும். வேளாண்மையில் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியப் பெருமுதலாளி நிறுவனங்கள் ஆகியவற்றின் மேலாதிக்கத்தை ஒழிக்கும். தமிழ் மண்ணிற்கும் மரபுக்கும் ஏற்ற மரபுசார் தொழில்நுட்பங்களையும் அதற்கிசைவான நீடித்த வேளாண்மைக்குரிய புதிய தொழில் நுட்பங்களையும் ஊக்குவிக்கும். ஆண் - பெண் இருவருக்கும் சம வேலைக்குச் சம ஊதியம் உறுதி செய்தல், உழவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வசதி செய்தல், வேளாண் விளைபொருள்களுக்கு மதிப்புக் கூட்டு ஏற்பாடுகள் செய்தல் போன்ற வகைகளில் வேளாண்மை செழிக்கத் தமிழ்த் தேசக் குடியரசு துணை செய்யும். 

3. கைத்தறி மற்றும் பட்டு நெசவுத் தொழில்களைப் பெருந்தொழில் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து அத்தொழில்களுக்கான கடன் வசதி, சந்தை வசதி செய்து தருதல், நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வூதியத்தை உறுதி செய்தல்.

4. தமிழகக் கடல்பரப்பு முழுவதும் மீன்பிடிக்கத் தமிழக மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, பன்னாட்டு, வடநாட்டுப் பெருநிறுவனங்கள் அந்நீர்ப்பரப்பில் தலையிடாமல் பாதுகாப்புத் தருதல். சிங்கள இனவெறி அரசின் தாக்குதலிலிருந்தும், அண்டைத் தேசிய இனங்களின் தாக்குதலிலிருந்தும் தமிழக மீனவர்களைப் பாதுகாத்தல். கடல் பொருள் ஏற்றுமதியில் மீனவர் சங்கங்களுக்கு முன்னுரிமை அளித்தல்.

5. கல்வி, வேலை வாய்ப்புகளில் அந்தந்த சாதி மற்றும் மதப் பிரிவின் மக்கள் தொகைக்கேற்ப தொகுப்பு முறை இடஒதுக்கீடு வழங்குதல். பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கலை-பண்பாடு முதலியவற்றில் மரபு வழியாகத் திறமை பெற்றுள்ள சமூகப் பிரிவினருக்கு அந்தந்த கல்விச் சேர்க்கையில் முன்னுரிமை வழங்குதல். தேர்தல்களில் இட ஒதுக்கீட்டை நீடிக்கச் செய்தல். 

6. அனைத்து முனைகளிலும் ஆரியப்- பார்ப்பனிய ஆதிக்கத்தை நீக்கி மக்களிடையே சமத்துவம் நிலவப் பாடுபடுதல். தீண்டாமையையும் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் ஒழித்தல். சாதிக்கலப்பு திருமணங்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட ஊக்குவிப்பு அளித்தல். இவற்றின் ஊடாக சாதி ஒழிப்பை விரைவுபடுத்துதல். 

7. அரசின் மதச் சார்பின்மையை உறுதிப்படுத்துதல். 

8. கல்வி, நீதி, நிர்வாகம் அனைத்து மட்டத்திலும் தமிழை முறையே கட்டாயப் பாடமொழியாகவும் பயிற்று மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் நிலைநிறுத்துதல். மொழிச் சிறுபான்மையினர் தமிழ் மொழியைக் கற்பதுடன் அவரவர் தாய்மொழியில் கல்வி கற்க முழுவாய்ப்பு அளித்தல். இந்தி, ஆங்கில ஆதிக்கத்தை அகற்றி அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழியை மேல்நிலையில் வைக்கும் ஒருமொழிக் கொள்கையைக் கடைபிடித்தல். ஆங்கிலத்தை மொழிப் பாடமாகக¢ கற்க வாய்ப்பளித்தல்.

9. அவரவர்க்கும் உரிய வழிபாட்டு உரிமையை உறுதி செய்தல். மத, மொழிச் சிறுபான்மையினர் தத்தம் பண்பாட்டைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை உறுதி செய்தல். தமிழை வழிபாட்டு மொழியாக்குதல் 

10. மதம், மரபு, பண்பாடு என்று எந்த வடிவிலும் நிலவும் பெண்ணடிமைத்தனத்தை முறியடித்தல். பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் அவர்களது மக்கள் தொகைக்கு உரிய விகிதத்தில் இட ஒதுக்கீடு அளித்தல். 

11.  திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு                              வழங்குதல். 

12. கல்வி பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்குதல். அனைவர்க்கும் கட்டாயக் கல்வி வழங்குதல். அனைத்து மட்டத்திலும் இலவசக் கல்வி வழங்குதல். அனைத்து ஏழை மாணவர்களுக்கும் இலவச உணவு, உடை, விடுதி வசதி  செய்து தருதல். அறிவியல் வழிப்பட்ட தமிழ்த் தேசிய, சனநாயகக் கல்வி முறையைச் செயல்படுத்துதல். 

13. வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்குதல். வேலையில்லாக் காலத்திற்கு வாழ்க்கைப்படி வழங்குதல்.

14. அனைவர்க்கும் தரமான இலவச பொதுநல, மருத்துவ வசதி அளித்தல். 

15. தொழிலாளர்களுக்கு வாழ்க்கை ஊதியத்தை உறுதி செய்தல். வேலை நிறுத்தம் செய்யும் உரிமை உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்க உரிமைகளையும், அரசியல் உரிமைகளையும் பாதுகாத்தல். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போன்றோருக்கும் இவ்வகை உரிமைகளை வழங்குதல். 

16. அரசு மானியம் கொடுத்து அனைத்து இன்றிய மையாப் பண்டங்களையும் மலிவு விலையில் தேவையான அளவு பொதுவழங்கல் அமைப்பின் மூலம் அளித்தல். 

17. கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகியவற்றை அனைத்து மக்களுக்கும் உறுதி செய்தல். வேறுபட்ட கருத்தோட்டமுடைய அரசியல் கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள் நடத்த முழு உரிமை அளித்தல். 

18. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் அளிக்கும் பொதுத் தேர்தல் மூலம் அரசாங்கம் அமைத்தல். தேர்ந்தெடுத்த வர்களைத் திருப்பி அழைக்கும் உரிமை வழங்கல். உறுப்பினர்களுக்கு நிர்வாகப் பொறுப்பு இருக்கச் செய்தல். 

19. சுதந்திரமான நீதித்துறையை உறுதி செய்தல். நீதித்துறையைச் சனநாயகப் படுத்துதல். சாவுத் தண்டனையை ஒழித்தல். சிறைச் சாலைகள் தண்டனை அனுபவிக்கும் இடமாக மட்டுமின்றி நல்வாழ்வுக்கான மாற்றம் கொணரும் இடமாகவும் செயல்பட வைத்தல். 

20. காலனி ஆட்சி அறிமுகப்படுத்தி தற்போது நடப்பிலுள்ள நிர்வாகக் கட்டமைப்பு முறையை முற்றாக மாற்றி அமைத்தல். வருவாய்த் துறை நிர்வாகப் பிரிவுகளைக் கலைத்தல். அதிகாரத்தைப் பரவலாக்கும் வகையில் வருவாய்த் துறை, உள்ளாட்சித்துறை ஆகியவற்றை இணைத்துப் புதிய நிர்வாக ஏற்பாடுகளைச் செய்தல். 

21. இறையாண்மையுள்ள தமிழ்த் தேசத்திற்குள் ஆட்சிமுறை மக்களுக்கு நெருக்கமானதாகவும் அனைத்து மக்களின் பங்கேற்பு உரியவாறு அமையும் வகையிலும் ஒரு கூட்டாட்சி முறைமையாக நிறுவப்படுதல். வரலாற்றுக் காரணங்களைக் கவனத்தில் கொண்டு தனிச்சிறப்பு மண்டலமாகப் புதுச்சேரியைத் தமிழ்த் தேசத்திற்குள் இருக்கச் செய்தல். 

22. மக்கள் கண்காணிப்புக்கு உட்பட்டதாகக் காவல்துறை இருக்கும் வகையில் சனநாயக ஏற்பாடுகளைச் செய்தல். அதே வேளை அதிகாரத்தில் இருப்பவர்களின் ஏவல்துறையாகச் செயல்படாமல் இருக்க அத்துறைக்கென வாரியம் அமைத்தல். 

23. அனைவர்க்கும் குடியிருப்பு வசதி செய்து தருதல். 

24. மேலிருந்து கீழ்வரை அரசின் அனைத்து மட்டத்திலும் ஊழல் நிலவாமல் தடுக்கவும், ஊழலைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், தற்சார்புள்ள விசாரணை அமைப்புகளும், நீதி மன்றங்களும் செயல்பட வைத்தல். 

25. இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல், சுற்றுச் சூழல் மாசுபாட்டைத் தடுத்தல், அணுஉலைகளை மூடுதல், தமிழ் மண்ணின் மரபு வழிப்பட்ட மருத்துவம், வேளாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வளர்த்தல். மரபீனி மாற்று விதைகளைத் தடை செய்தல். 

26. நிர்வாகம், நீதித்துறை அனைத்தும் மக்களின் கண்காணிப்புக்கு உட்பட்டதாக மாற்றும் வகையில் திட்டமிடுதல், செயலாக்குதல் ஆகிய அனைத்திலும் உள்ளூர் மட்டத்தில் மக்களுக்கு நேரடி வாய்ப்புகளை வழங்கிட சட்ட ஏற்பாடுகள் செய்தல். 

27. மக்கள் நலமும், சமூக வளர்ச்சியும் சார்ந்த கலை இலக்கியங்கள் வளர சிறப்புக் கவனம் செலுத்துதல். கலை, இலக்கியப் படைப்பாளர்கள், கலைஞர்கள் ஆகியோரை ஊக்குவித்தல். 

28. உலகெங்கும் நடைபெறும் தேசிய விடுதலைப் போராட்டங்கள், இனவெறி, நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள், நிகரமைக்கான போராட்டங்கள் ஆகியவற்றை ஆதரித்தல். 

29. ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தல். தமிழகத்திலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல். அவர்கள் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று தொழில் புரிய வாய்ப்பளித்தல். அவர்களில் விருப்பமுள்ளவர்களுக்குக் குடியுரிமை அளித்தல். 

30. உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே உயிரோட்டமான உறவு பேணுதல். அவர்களின் அரசியல், பொருளியல், பண்பாட்டு உரிமைகளுக்குத் துணை நிற்றல். தமிழர் அனைத்துத் தேசியம் (சர்வதேசியம்) உருவாகிச் செயல்பட வழிவகுத்தல். 

மேற்கண்ட கடமைகளைத் தமிழ்த் தேசக் குடியரசு நிறைவேற்றும். 

இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசை நிறுவுவது என்பது சட்டப் பேரவை மூலமாகவோ, இந்திய நாடாளுமன்றத்தின் மூலமாகவோ நிறைவேற்ற வாய்ப்பில்லை. தமிழகச் சட்டப் பேரவைக்கு அவ்வாறான அதிகாரம் கிடையாது. இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு எண்ணிக்கை தமிழர்களுக்குக் கிடையாது.

இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசை நிறுவும் தமிழ்த் தேசியப் புரட்சி போர்க் குணமுள்ள மக்கள் திரள் எழுச்சியின் மூலமே நடைபெற முடியும்.

தேர்தல் பாதை தமிழ்த் தேசக் குடியரசை நிறுவப் பயன்படாது. அதைப்போலவே ஆயுதக்குழுப் போராட்டமும் தமிழ்த் தேசியப் புரட்சிக்குப் பயன்படாது. போர்க் குணம் மிக்க மக்கள்திரள் எழுச்சியே தமிழ்த் தேசப் புரட்சியின் வடிவமாகும்.

கொள்கை, நேர்மை, அர்ப்பணிப்பு, ஈகம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசியப் புரட்சியைக் கட்டி எழுப்புவதும், நமது அரசியலுக்கு புதுக் குருதி பாய்ச்சுவதும் இன்றைய வரலாற்றுத் தேவை. தமிழ்த் தேசியப் பேரியக்கம் இந்த வரலாற்றுக் கடமையில் தனது பங்கைச் செலுத்த முன்வருகிறது. தமிழக மக்கள் இந்தப் புரட்சிகர அரசியல் இயக்கத்தை அரவணைக்க வேண்டும்; அணிதிரள வேண்டும்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT